மக்களின் உண்மையான பிரச்சனைகளை ஜனநாயகத் தன்மையுடன் விவாதித்து தீர்வைக் கொணர்வதும், மக்கள் மத்தியில் விதைக்கப்படும் பிரிவினை முழக்கங்களை புறக்கணித்து, சக மனிதனை நேசிக்கும் ஒன்றுபட்ட சூழலை உருவாக்குவதுமே  மாற்றுவின் அடிப்படை நோக்கம்.

ரசனையும், ரவுத்திரமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத உணர்வுகள். வாழ்க்கையை ரசிக்கப் பழகியவர்கள் தான் அநீதிகளைக் கண்டு கோபப்படவும் செய்கிறார்கள். அநீதிகளைக் கண்டு கோபப்படுவதே மாற்றத்திற்கான அடிப்படை.  கண்முன்னே நடக்கும் அநீதிகளை கருத்தாகவோ, புகைப்படமாகவோ பகிர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே திருப்தி கொள்கிறவர்கள் அந்த அநீதிகளை தீர்க்க என்ன செய்கிறார்கள்? மாற்று நிச்சயம் அந்த வெற்றிடத்தை நிரப்பும்.

ஜனநாயகமும் மனித நேயமும் உலகின் சிறந்த அடிநாதங்களாகும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இதன் கூறுகளை மேம்படுத்துவதில் படைப்பாளிகளின் பங்கு இன்றியமையாதது. அந்த வகையில் மாற்று படைப்பாளிகளை மட்டுமல்ல, ஒரு மாற்றத்திற்கான உலகை உருவாக்கும் பாதையில் செல்லும்.

முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஒரு தனி நபருக்கே அமானுஸ்ய ஆற்றலைத் தருகின்றன. ஆனால், அதற்குள்ளாகவே நம்முடைய கனலைத் தனித்துவிடும் பேரபாயத்தையும் கொண்டிருக்கின்றன. சிந்தனையில் உண்டாகும் தீப்பொறிகள் ஒன்று சேர்த்து, “நியாயத் தீ மூழ” வேண்டும். எந்த ஒரு நல்ல சிந்தனையும் செயலில் தான் முழுமையைடைகிறது. அதற்கான ஒரு வாய்ப்பை படைப்பாளிகளுடன் சேர்ந்து மாற்று ஏற்படுத்தும்.

மாற்று தளம் கட்டற்ற மென்பொருளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது‍. எந்த ஒரு மென்பொருளும் சரி இணையதளமும் சரி மக்கள் பங்கேற்பின் வழியாகவே செலுமையடைகிறது. அந்தச் செலுமையும், அதனால் உருவாகும் அறிவுச் சொத்தும் மக்களுக்கே உடைமையாக இருக்க வேண்டும் என்ற கட்டற்ற மென்பொருளின் கொள்கைகளை அடிப்படையாகச் கொண்டது.

இணைய ஊடகத்திற்கு, மக்கள் ஊடகமாக பரிணமிக்கும் ஜனநாயகத் தன்மை உண்டு. இருந்தாலும், இன்றைய மைய ஊடகங்களான தொலைக்காட்சி, சினிமா மற்றும் பத்திரிக்கைகள் தான் மக்களின் சிந்தனைகளையும் இணையத்தின் போக்கையும் தீர்மானிக்கின்றன. இந்த போக்குகளை மாற்றுவதே மாற்றுவின் இன்றியமையாத பணி.

மாற்று ஒரு கட்டற்ற ஜனநாயகமல்ல. கட்டமைக்கும் (Constructive) ஜனநாயகம், பன்மையை அங்கீகரிக்கும் ஒருமைப்பாடு.

“எங்களோடு கைகோர்த்து, இந்த நோக்கங்களை முன்னெடுக்க விரும்பும் எவரையும் இரு கைகளையும் அகல விரித்து வரவேற்கிறோம்”