பாம்பு சட்டை – விமர்சனம் . . . . . . !

சினிமா என்கிற கலை வடிவத்தில் பொழுதுபோக்கு தான் முதன்மை, என்று எண்ணுபவர்களே சினிமாவிலும் சினிமாவிற்கு வெளியிலும் பெரும்பான்மையானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதையும் மீறி அதையும் தாண்டி… அவ்வப்போது கலை சமூகத்திற்கானது என்று உறுதி செய்ய சில படைப்பாளிகள் வருவார்கள். சில படைப்புகளும் வரும். அப்படி ஒரு படைப்பாளியாக ஆடம் தாசன் வந்திருக்கிறார். இயக்குநரின் ஷங்கரின் உதவி இயக்குநர். ஆடம் தாசனின் முதல் படைப்பு தான், “பாம்பு சட்டை”.

சதுரங்கவேட்டைக்குப் பிறகு, பாம்புசட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரிக்கிறார் என்றது, இந்த படத்தின் ஆரம்பகால அறிவிப்புகள். அதைத்தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்த, பாம்புசட்டை, மிகமிக காலதாமதமாக வெளியாகி இருந்தாலும் அதையும் தாண்டி பரவலான மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது.

தனது முதல் படத்திலேயே பலவகையான உணர்வுகளை, உறவுகளை கையாண்டிருக்கும் இயக்குநர் ஆடம் தாசன் கவனிக்க வைக்கிறார். படம் நெடுகவும் ஆடம் தாசனின் வசனங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. நம்மையும் மீறி கைத்தட்ட வைக்கின்றன.

“ஒங்கப்பன் செத்துப்போனா, ஒங்கம்மாவை வீட்டை விட்டு துரத்தி விட்ருவீங்களாடா?” என தன் அண்ணிக்காக பாபி சிம்ஹா கோபத்தில் கேட்கிற ஒரே ஒரு வசனமே போதும், பெண்கள் மீதான இயக்குநரின் கருத்தியலை புரிந்துகொள்ள.

விதவையாக இருக்கும் பானுவிடம், மறு திருமணத்தின் நியாயம் மற்றும் தேவை பற்றி பேசுகிற, முன்னாள் விதவைப்பெண்மணியின் வசனம் ஒவ்வொன்றும் உங்களை அங்கும் இங்கும் அசையாமல் கவனிக்க வைக்கும். அத்தனை உண்மையும் புரட்சியும் நிறைந்த வசனங்கள் அவை.

ஹரிதாஸ், பாகுபலி, பிச்சைக்காரன், கபாலி, ஜோக்கர், தோழா, மாவீரன் கிட்டு… என கூர்மையான வசனங்களுக்காக நினைவு கூரப்படும் படங்களின் வரிசையில் பாம்புசட்டையும் இடம் பிடிக்கிறது.

தன் பின்னால் விரட்டி விரட்டி காதலித்த ஒருவனிடம் முதலில் விலகி, பின் நெருங்கி, காதலுக்கு கதாநாயகி ஓ.கே. சொல்லும்போது, நீ வேண்டாம் என கதாநாயகியிடம் அந்த வாலிபன் சொல்வதும், அதற்கான காரணமும் உறுதியாக தமிழ் சினிமாவிற்கு புதுசு தான்.

கள்ள நோட்டு கும்பல் பற்றி இதுவரை நாம் புரிந்து வைத்திருந்த அத்தனை இலக்கணங்களையும் உடைத்துப்போடுகிறது பாம்புசட்டை. இவ்வளவு நூதனமாக, இவ்வளவு புத்திசாலித்தனமாகக்கூட திருடுவார்களா, அடுத்தவர் பணத்தை அபகரிப்பார்களா என்பது அதிர்ச்சி அடைய வைக்கிறது.

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு, சார்லி, குரு சோமசுந்தரம், கே. ராஜன் என எல்லா கதாபாத்திரங்களும் நினைவில் நிற்பார்கள்.

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் இடையிலான உறவை விட, பாபி சிம்ஹா, பானுவுக்குமான உறவு… பாம்புசட்டையின் ஆச்சர்யம். அஜீஸ்-ன் பாடல்களும் மிக இனிமையாக கண்களை கடந்து செல்கிறது.

ஒரு பக்கம் உணர்வு உறவியலாகவும், இன்னொரு பக்கம், த்ரில்லர் கமர்சியலாகவும் இருவேறு தளங்களில் பயணிக்கும் கதையில், முக்கிய கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் படம் பார்ப்போரை கவர்கிறார்கள். அந்த இரண்டு பக்கங்களும் படத்தின் பலமாக இருக்கிறது, அதுவே கொஞ்சம் பலவீனமாகவும் அமைந்திருக்கிறது.

சென்னை மாநகரின் சுற்றுப்புற மக்களுக்கும் சென்னைக்கும் உள்ள வாழ்க்கை, வேலை ரீதியிலான உறவை இயல்பாகச் சொல்ல முற்படுகிறது பாம்பு சட்டை.

தண்ணீர் கேன் போடுபவர் கதைநாயகன்(சிம்ஹா), எக்ஸ்போர்ட் கம்பெனி மற்றும் நகைக்கடையில் வேலை செய்யும் கதை நாயகிகள்(கீர்த்தி சுரேஷ், பானு), துப்புரவுத்தொழில் செய்பவர் கதைநாயகியின் அப்பா(சார்லி) என தனது முதல் படத்திலேயே எளிய மக்களை யதார்த்தமாக முன் நிறுத்துகிறார் ஆடம் தாசன். அந்த துணிச்சலும் பிடிவாதமும் அரசியலும் ஆடம் தாசனை பற்றிய மதிப்பீடுகளை கூட்டுகிறது.

ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், வசனங்கள், கதாபாத்திரங்கள் என அனைத்தும் அழகாக அமைந்திருக்கும் பாம்புசட்டை, படம் பார்த்து முடிக்கையில் வேறு விதமான மனநிலையை உருவாக்குகிறது.

இந்த படம் எடுத்துக்கொண்ட இரண்டு கதைக்களங்களில் எதையாவது ஒன்றை மட்டும் முதன்மைப்படுத்தி முழுப்படமும் அமைந்திருந்தால், பாம்புசட்டை மிக மிக கனமான படமாக வந்திருக்கும் என்று எண்ணத்தை உருவாக்குகிறது.

ஆனால், படைப்பாற்றலைப்பொறுத்தவரை இயக்குநர் ஆடம் தாசன் தனது அடுத்தடுத்த படங்களின் வாயிலாக தமிழ்சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்பது புரிகிறது.

–    முருகன் மந்திரம்.

 

About ஆசிரியர்குழு‍ மாற்று