மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்)-1

உலகின் கொலைகார நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிற நாடு, வடஅமெரிக்காவிற்கு கீழே மத்திய அமெரிக்காவிலிருக்கும் ஹோண்டுரஸ் என்கிற நாடுதான். ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு, 91 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். உலகின் வேறெந்த நாடுகளை விடவும், இவ்விகிதம் மிக அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொலைகார நாடு குறித்து நமக்கு ஏன் எந்த ஊடகங்களும் செய்தி சொல்லவில்லை? மனிதவுரிமை குறித்து பேசித்தள்ளும் மேற்குலக நாடுகள் எவையும் ஹோண்டுரஸ் போன்ற நாடுகளின் நிலை பற்றி கவலைப்படாமலும், நம்மையும் கவலை கொள்ள விடாமலும் பார்த்துக் கொள்வதன் இரகசியம் என்ன? ஹோண்டுரஸ் கொலைகார நாடாக இருப்பதற்கான காரணமும் அவர்களே…. அதனை தொடர்கதையாக இருக்க வைப்பதுவும் அவர்களே…. ஹோண்டுரசின் 500 ஆண்டுகால அரசியல் வரலாற்றை சுருக்கமாகச் சொல்வதன் மூலம், நமக்கெல்லாம் மறைக்கப்பட்டிருக்கிற ஒரு நாட்டின், அந்நாட்டு மக்களின் அவல நிலையினை உங்களுடன் பகிர்கிற முயற்சியே இக்கட்டுரை…. 

ஹோண்டுரஸ் – விடுதலைக்கு முந்தைய வரலாறு:

கப்பலில் ஆயுதங்களோடும் சிலநூறு சிப்பாய்களோடும் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று அங்கெல்லாம் வாழ்ந்த பூர்வகுடி மக்களை அடிமைப்படுத்தியும் அவர்களின் செல்வங்களை-உழைப்பைச் சுரண்டியும் வரலாற்றில் பெரும் பெயர் பெற்றவர்தான் கொலம்பஸ். 1502 இல் அப்படியானதொரு பயணத்தில்தான் மத்திய அமெரிக்கப்பகுதியில், இன்று “ஹோண்டுரஸ்” என்று அறியப்படுகிற நாட்டைக் கண்டுபிடித்தார்(?!?). அந்நாட்டின் கரையோரக் கடல் கூட ஆழமானதாக இருந்தமையால், “ஆழம்” என்னும் பொருள்பட “ஹோண்டுரஸ்” என்று பெயரிட்டார்.

1524 இல் ஹோண்டுரசைப் பிடிக்க ஸ்பெயின் மன்னர் ஹெர்னன் அனுப்பிய படைத் தளபதியான ஒலித், ஹோண்டுரசைக் கைப்பற்றியதும் மன்னருக்கு அடிபணியாமல் தானே ஹோண்டுரசின் மன்னரென அறிவித்துக் கொண்டான். பின்னர் ஸ்பெயின் மன்னர் மற்றொரு படைத்தளபதியை அனுப்பி, ஹோண்டுரசை மீண்டும் தனதாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து, ஹோண்டுராஸ் என்கிற நாடு ஸ்பெயின் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தாலும், ஹோண்டுரசை மேற்பார்வையிட்டு ஆட்சி நடத்த ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

1537 இல் காலனிய ஆட்சியை எதிர்த்தும், வரி கட்ட மறுத்தும் பூர்வகுடி மக்களை ஒன்றுதிரட்டி ஹோண்டுரசின் விடுதலைக்கு மிகக்கடுமையாக போராடினார் லெம்பிரா என்கிற ஹோண்டுரசின் பூர்வகுடியொருவர். ஆனால் அம்மக்களது போராட்டம் நசுக்கப்பட்டது. (லேம்பிராவின் நினைவாகவே இன்றைய ஹோண்டுரசின் நாணயத்திற்கு, அவரது பெயரே சூட்டப்பட்டிருக்கிறது).

1539 இல் ஆளுநராகப் பதவியேற்ற ஆல்வரடோவின் ஆட்சியில்தான், கரீபியன் தோட்டங்களுக்கு ஹோண்டுராஸ் மக்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர். குவாத்தமாலாவின் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கங்களும் ஹோண்டுராஸ் மக்களை மேலும் அடிமைப்படுத்தின. ஹோண்டுரசைச் சுற்றிலும் ஆட்சியாளர்களின் பார்வைக்கு சிக்கிய ஒவ்வொரு தங்கச் சுரங்கங்களுக்கும், வெள்ளிச் சுரங்கங்களுக்கும் ஹோண்டுராஸ் மக்கள் அடிமைகளாக அனுப்பப்பட்டனர். இதனை எதிர்த்து அவ்வப்போது சிறுசிறு போராட்டங்கள் வெடித்தாலும், அவையனைத்தையும் தவிடுபொடியாக்கினர் காலனிய ஆட்சியாளர்கள். ஹோண்டுரசின் மேற்குப்பகுதியினை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர்களும் தங்களால் இயன்றவரை அம்மக்களை அடிமைப்படுத்தினர். ஹோண்டுரஸில் தங்களது எல்லையை விரிவாக்கிக் கொள்ள அவ்வப்போது பிரிட்டனும் ஸ்பெயினும் சண்டையிட்டுக் கொண்டு பெருத்த சேதமுண்டாக்கினார்கள். மேலும் 50 ஆண்டுகள் வரை தொடர்ந்த இச்சண்டையினை மெக்சிகோவில் நடந்த மக்கள் கிளர்ச்சியால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 1821இல் ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்று தனிக் குடியரசாக மாறியது ஹோண்டுராஸ்.

வாழைப்பழ நிறுவனங்கள்:

ஸ்பெயின் போன பிறகு, வருவோர் போவோரெல்லாம் சில ஆண்டுகள் ஹோண்டுரசை ஆக்கிரமிப்பதும், மத்திய அமெரிக்காவிற்குள்ளேயே குழப்பங்கள் விளைவிப்பதுமாக ஹோண்டுரசின் நிலை மோசமானதாகவே தொடர்ந்தது. ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் ஹோண்டுரசை விட்டு வெளியேறியதும் புதுவகையான முறையில் நாடு பிடிக்கிற நடவடிக்கைகளில் இறங்கியது அமெரிக்கா. இந்த நூற்றாண்டில் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, எகிப்து, பாலஸ்தீனம் போன்ற மத்திய கிழக்காசிய நாடுகளில் காலடி வைத்து ஆக்கிரமிப்புபோரினை நடத்தி வருவதைப்போல், கடந்த நூற்றாண்டில் தென்னமெரிக்க நாடுகள் முழுவதிலும் கவனம் செலுத்தி அடிமைப்படுத்தி வந்தது அமெரிக்கா. மத்திய கிழக்காசியாவினை ஆக்கிரமிக்க எண்ணை வளம் எப்படி காரணியாக இருந்ததோ, அதே போன்று கனிமவளங்களும் அளவிலாத இயற்கை வளங்களும் தென்னமெரிக்காவினை ஆக்கிரமிக்க காரணமாக இருந்தது. ஹோண்டுரசின் மீது அமெரிக்கா கவனம் செலுத்தியதற்கு மிகமுக்கியமான காரணம், அந்நாட்டிலிருந்த வாழைத்தோட்டங்கள் தான். அமெரிக்காவில் ஆப்பிள் மரத்தை வளர்த்து, அறுவடை செய்து அதில் இலாபம் பார்த்தால் மிகக்குறைந்த இலாபமே கிடைத்துவந்த சூழலில், மிகக்குறைந்த முதலீட்டில் எல்லையில்லா இலாபம் பார்க்க வழிவகை செய்தன ஹோண்டுரசின் வாழைப்பழத் தோட்டங்கள்.

யுனைடட் ஃப்ரூட் நிறுவனம், ஸ்டாண்டர்ட் ஃப்ரூட் நிறுவனம் மற்றும் சியாமல் ஃப்ரூட் நிறுவனம் ஆகிய அமெரிக்க பழ நிறுவனங்கள், ஹோண்டுரசின் பெரும்பகுதித் தோட்டங்களை விலைக்கு(?!?) வாங்கி, அங்குள்ள மக்களை அடிமைகளாக பணிக்கமர்த்தி வாழைப்பழ உற்பத்தியினை செய்தன.

ஹோண்டுரசின் ஒட்டு மொத்த நிலப்பகுதிகளில் 10% மேற்பட்ட நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து சொந்தமாக்கி, வாழைத் தோட்டங்களமைத்தது யுனைடட் ஃப்ரூட் நிறுவனம். அதனால் மற்ற சிறு விவசாயிகளால் இந்நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க முடியவில்லை. ஹோண்டுரசில்  இரயில் பாதைகள் அமைத்துத் தருவதாகவும் அதற்கு பதிலாக நிலங்களை தர வேண்டுமென்றும் ஹோண்டுரஸ் அரசுடன் ஒப்பந்தமும் போட்டது இந்நிறுவனம். இரயில் பாதைகள் அனைத்தும் வாழை தோட்டத்திலிருந்து ஏற்றுமதி  செய்வதற்கு வசதியாகவே அமைக்கப்பட்டன. (இலவசமாக நிலமும் கிடைத்தது, வேலைக்கு அடிமைகளும் கிடைத்தனர், போக்குவரத்திற்கு இரயில் பாதைகளும் கிடைத்தன). இலாபத்தில் சிறிய பங்கினை சில ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு நிதியாகவும் வழங்கி வந்தன வாழைப்பழ நிறுவனங்கள். உற்பத்தியான வாழைப்பழங்களை வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பதற்கு ஏதுவாக, வாழைப்பழ தோட்டங்களிலிருந்து இரயில் பாதைகள் போடப்பட்டன. வியாபார முதலாளிகளுக்கு மட்டுமே பயன்பட்ட ரயில் பாதைகளையே, தாங்கள் ஹோண்டுரசிற்கு மிகப்பெரிய உதவிகள் செய்கிறோம் என்று சர்வதேச மக்களை நம்ப வைத்துக் கொண்டிருந்தன அமெரிக்க அரசும், வாழைப்பழ நிறுவனங்களும்.

“பனாமா நோய்” என்கிற ஒருவித ஃபங்கசால் வருகிற நோய், ஹோண்டுரசின் வாழைப்பழத் தோட்டங்களை தாக்கிய போது, அதனை சரி செய்வதற்கு ஆகிற செலவினை கணக்கில் கொண்டு அப்படியே விட்டுவிட்டு வேறு பகுதிகளுக்கு தோட்டமமைக்கச் சென்றுவிட்டன வாழைப்பழ நிறுவனங்கள். அவ்வாறு செல்கிறபோது ஏற்கனவே அமைக்கப்பட்ட இரயில் பாதைகளையும் பெயர்த்தெடுத்து புதிய பகுதிகளுக்கு கொண்டு சென்றனர் .

பனாமா நோயினால் பாதிக்கப்பட்ட தோட்டங்களும், அதனைச் சுற்றி வாழ்ந்த மக்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்று அழிந்து போயினர்.

ஹோண்டுரசை  அழித்து அதில் லாபம் பார்த்து வந்த நிறுவனங்கள் யாவும் சிறிய பெயர் மாற்றத்துடன் இன்றைக்கும் உலகின் மிகப்பெரிய பழ நிறுவனங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எந்த சர்வதேச நீதிமன்ற வாசலுக்கும் சென்று மன்னிப்பும் கோரியதில்லை; தண்டனையும் அனுபவிக்கவில்லை; ஒரு பைசா கூட நஷ்ட ஈடாக யாருக்கும் வழங்கியதுமில்லை. யுனைடட் ஃப்ரூட் நிறுவனம் இன்று பெயர் மாற்றம் அடைந்து ஆண்டுக்கு 20,000 கோடி ருபாய்க்கு விற்பனை செய்து சர்வதேச அளவில் பழ வியாபாரத்தில் முதலிடத்தில் இருக்கும் “சிக்கிட்டா ப்ராண்ட் இன்டர்நேஷனல்” நிறுவனம் ஆகும்.

(தொடரும்…)

About இ.பா.சிந்தன்

  • Pingback: மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்) – 3 | மாற்று()

  • இபா.சிந்தன்
  • அருமை…புதிதாக தெரிந்து கொண்டேன் இந்த நாட்டை பற்றி..

  • நா.வே.அருள்

    தேவையான கட்டுரை இது. அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டிய உண்மையை வெளிக்கொண்டுவருகிற அற்புதமான கட்டுரை….

  • எப்படியெல்லாம் சுரண்டல்கள் நிகழ்கிறது? இதே வாழைப்பழ வர்த்தகம் குறித்து வலைப்பதிவாளர் திரு.வின்சென்ட் பகிர்ந்த செய்தி… பொதுவாக அயலக வர்த்தக ரீதியில் வாழை பயிரிடும்போது எவ்வளவு தண்ணீர் இந்த மண்ணில் சுரண்டப்படுகிறது அதன் வர்த்தக வருமானத்தை விட அதிக மதிப்பு வாய்ந்த தண்ணீர் செலவிடப்படுகிறது எனும் உண்மையை நாம் உணர்ந்துள்ளோமா?

  • லீப்நெக்ட்

    மறைந்திருக்கும் மர்ம தேசங்களில் பின்னப்பட்டுள்ள சதியை அம்பலப்படுத்தியுள்ளீர்கள்…..