கேத்தன் தேசாய் – உள்ளூரிலிருந்து உலகத்திற்கு ஏற்றுமதியாகும் ஊழல் . . . . . !

top-medical-colleges1

ஒரு வாரத்திற்கு முன்பாக உலக கபாடி இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி  இந்தியா உலக சாம்பியன் ஆனது. ஆனால் அதே நாளில் இன்னொரு பதவியேற்பும் நடந்தது ….பதவியேற்புக்கும், கோப்பையை வென்றதற்கும் சம்பந்தம் இல்லை..ஆனால் ஒன்று நாட்டிற்கு தலைநிமிர்வு..மற்றொன்று தலைகுனிவு..நாட்டுக்கு மட்டுமல்ல.. உலகுக்கே..ஏன்?

உலக அளவில் மருத்துவர்களுக்கான அமைப்பு உலக மருத்துவ கழகம். இதில் உலகெங்கிலும் இருக்கும் லட்சக்கணக்கான மருத்துவர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். 112 நாடுகளை சேர்ந்த பல்துறை மருத்துவ நிபுணர்கள், இதில் அங்கம்.. இந்த உயரிய அமைப்பின் தலைவராக கேத்தன் தேசாய் எனும் இந்தியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்…. பெருமைதானே என சில தேச பக்தர்கள் சொல்லக்கூடும்.. அப்படி தேர்வு செய்யப்பட்டவர் நேர்மையானவராக, சாதனைகள் புரிந்தவராக , உலகமே மெச்சும் புதிய கண்டுபிடிப்புக்களை செய்து மருத்துவத்தை அனைத்து மக்களும் பயன் படும் மாபெரும் சேவை செய்தவராக இருந்தால் நாமும் ஏன் நாடே பெரு விழா எடுத்து அவரை பாராட்டி இருக்கும்…ஆனால் தேர்வானவரோ பல ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்…அவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிட்ட போது கட்டி தங்கங்களை வெட்டி எடுத்தனர். கணக்குக்கே வராத 2500 கோடி ரூபாயை கைபற்றினர்..அதிர்ச்சியாக உள்ளதா? இந்த மாமனிதரை பலர் மறந்திருக்க கூடும்…அன்றாடம் இருக்கும் பல வேலைகளில் இது போன்ற பல ஊழல்கள் நடந்து கொண்டே இருப்பதால் எதை நினைவில் கொள்வது? அந்த கறை படிந்த கைகளுக்கு சொந்தக்காரர் கேத்தன் தேசாய்….

யார் இந்த கேத்தன்?

இந்தியாவில் இருக்கும் லட்சக்கணக்கான மருத்துவர்கள் (ஆங்கில மருத்துவம் பின்பற்றும்) உறுப்பினர்களாக news-oneஇருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலின் மேனாள் தலைவர். பல மாநிலங்களில் இருக்கும் கிளை அமைப்புக்களின் மூலம் “ஜனநாயக“ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு கவுன்சிலின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அப்படி என்ன இவர்களுக்கு மதிப்பு இருக்கிறது என நீங்கள் வினவலாம்.. இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் , அதில் எத்தனை மருத்துவம் படிப்பதற்கான இடங்கள் இருக்க வேண்டும் என்பதையும், மருத்துவ கல்லூரி புதிதாக துவக்குவதற்கும், கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்குவதற்கும், தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கும் இந்த அமைப்பின் (நிர்வாகிகளின் குறிப்பாக “தலைவரின்”) ஒப்புதல் பெற வேண்டும் . இப்போது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும். ஏன் செல்வாக்கு மிக்க பொறுப்பு என்று… இன்று மிகப்பெரிய வணிகமாக மாறியுள்ள மருத்துவ படிப்புக்கு, (தனியார் கல்லூரிகளின் மூலம்) அவர் கையொப்பமே அடிப்படை. அப்படிப்பட்ட பொறுப்பில் கேத்தன் தேசாய் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் புதிய கல்லூரி துவக்குவதற்கு 2 கோடி (கம்மி தான்) பெற்றார் என்ற ஊழல் குற்றச்சாட்டு எழுந்த போது அவர் மீதும், முன்னால் பதிவு செய்யப்பட்ட வருமான வரித்துறை ரெய்டும் நடந்தது. இந்த ஊழல் நடந்தது 2010 ஆம் ஆண்டு.  இந்த பெரு ஊழலை செய்த காலத்தில் தான் அவர் பல பொறுப்புக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருந்ததால், அந்த பொறுப்புக்களை அவர் ஏற்க முடியவில்லை. பொதுவாகவே இது போன்ற அமைப்புகளில் அடுத்து பதவி ஏற்கபோவது யார் என்பதை முன்கூட்டியே தேர்வு செய்து கொள்ளும் நடைமுறை உண்டு. அந்த அடிப்படையில் கேத்தன் முன்னரே தேர்வு செய்யப்பட்டவர். தான் இருக்கும் நாட்டில் ஒருவர் மீது ஊழல் விசாரணை நடைபெறும் போதோ, பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், அவரை உயர் பதவிக்கு முன்மொழிவதோ, நியமிப்பதோ இல்லை. ஆனால் கேத்தன் தேசாய் ஏழு கடல், மலை தாண்டி , எப்படியெல்லாம் சாகசம் செய்யமுடியுமோ அப்படி எல்லாம் வித்தைகளை “திறம்பட” செய்து பதவியை கைபற்றியுள்ளார். சாதாரண பதவி அல்ல. உலகப் பதவி.

    இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. மருத்துவ துறையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்த பெருமை இந்த அமைப்புக்கு உண்டு. கடந்த காலங்களில், பல வகையான சட்டதிருத்தங்கள், நோய் தடுப்பு திட்டங்கள், கடைகோடி சாமானிய இந்தியனுக்கும் பலன் அளிக்கும் முன்முயற்சிகள் என பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்.. ஆனால் அவை அனைத்தும் கேத்தன் தேசாய் போன்றவர்களால் மறந்தே போனது. இது ஒரு புறம், இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகளால் ஒட்டுமொத்த மருத்துவ சமூகமே வெட்கி தலை குனிய வேண்டிய அவல நிலை. ஏற்கெனவே மருத்துவர்கள் மீதிருந்த மதிப்பு வெகுவாக இது போன்ற ஆசாமிகளால் குறைய துவங்கியுள்ளது.

தனி ஒருவன்அல்ல…..

கேத்தன் தேசாய் என்ற தனி நபர் மட்டுமா .இந்த ஊழலை செய்திருக்க முடியும்..இதில் அரசும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்றால் முதலில் மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், துவங்கி, பல கட்டங்களை தாண்டி கிடைக்க வேண்டிய அங்கீகாரம் எளிதில் எதுவுமே இல்லாத கல்லூரிக்கு கிடைக்கும் மாயம் என்ன? ஆக கையொப்பம் இடுபவராக வேண்டுமானால் கேத்தன் தேசாய் இருந்திருக்கலாம்…அரசின் ஆதரவு இல்லாமல் செய்திருக்கவே எதையும் செய்திருக்க இயலாது. ஆக ஒட்டு மொத்த அரசையும் குற்றவாளி கூண்டில் நிறுத்திட வேண்டும்.ஒரு பக்கம் கல்வியில் தனியார்மயத்தை ஊக்குவித்த மத்திய , மாநில அரசுகள், அரசியல் செல்வாக்கு என அனைத்துமே மூல காரணம். ஆக கேத்தன் தேசாய் எனும் தனி நபரின் பொறுப்போடு ஒட்டுமொத்த அரசும் இந்த ஊழல் வலை பின்னலில் இணைந்துள்ளது.

கேத்தன் தேசாய் போன்ற நபர்கள் எப்படி தொடர்ந்து எந்த ஆட்சி வந்தாலும் செல்வாக்கோடு இருக்கிறார் என்பதே ஒரு பெரிய ஆச்சரியம் தான் என்கிறார் நெறிமுறை மருத்துவத்துக்கான தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அபே சுக்லா. மேலும் இவர் போன்றவர்கள் இம்மாதிரியான உயர் பொறுப்புக்கு செல்வது மேல்மட்ட சூழ்ச்சி என்றும், மருத்துவத்தை மக்கள் பணியாக நினைக்கும் பலரை அவமானப்படுத்துவதாகும் என்கிறார்.

anbumani_jpg_14468_2591874gமத்திய சுகாதார அமைச்சகமே ஊழலில் இவரோடு சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளது. பசுமை நாயகன் அன்புமணி சுகாதார துறை அமைச்சராக இருந்த போது பல சாதனைகளை செய்ததாக இன்னும் அவர் கட்சிக்காரர்கள் மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். அவர் அமைச்சராக இருந்த போது தான் இந்தியாவின் புகழ்மிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் அவரின் சுயலாபத்துக்காக பொய்யான காரணங்கள் சொல்லி மூடப்பட்டது என்பதை நாடறியும். அதோடு கேத்தன் தேசாய்க்கும் அன்புமணிக்கும் பெரும் பனிப்போர் அக்காலத்தில் உருவானதும், அதற்கு முக்கிய காரணம் முறையாக பணப்பரிமாற்றம் நடைபெறாதது தான் அடிப்படை என்பதும் நாடறிந்த விவகாரம். ஆக இது ஒரு கூட்டு கொள்ளை .

இந்த முடைநாற்ற விவகாரங்களையெல்லாம் கொஞ்சம் கூட பார்க்காமல், ஒரு மதிப்புமிக்க அமைப்பின் சர்வதேச தலைவராக ஒருவர் பொறுப்பேற்கிறார் என்றால் மருத்துவ உலகத்தை லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் கார்ப்பரேட்டுகள் ஊடுருவல் இல்லாமலா இருந்திருக்கும். அருதியிட்டு சொல்ல முடியும்..இது அவர்கள் வேலை தான். யார்  முக்கிய பொறுப்புக்கு வந்தால் தங்கள் நோக்கம் நிறைவேறுமோ அவர்களின் மிகப்பெரிய பலத்தோடு தான் இக்கொடுமை நடந்துள்ளது. இதற்கு மாற்று இருக்கிறதா?

இந்துத்துவ அஜெண்டா……இதிலுமா?

ஒரு பிரச்சனை எழும் போது தீர்வுக்காக மாறுபட்ட கருத்துக்கள் எழுவது சாத்தியமே.. ஆனால் பிரச்சனைக்கான அடிவேர் காரணத்தை யாரும் மறுதலிக்க இயலாது. அதிலும் ஒரு வித்தியாசத்தை காட்டுவது தானே சங்கிகளின் வேலை. இந்த விவகாரத்திலும் வித்தியாசமான அணுகுமுறையை மத்திய பிஜேபி அரசு முன்மொழிகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் வழியாக நாக்பூர் மேலிடம் புது திட்டத்தை பேசவைக்கிறது.

நடைமுறையில் இந்திய மருத்துவ கவுன்சில் அகில இந்திய நிர்வாகிகள், மற்றுமுள்ள பொறுப்புக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்தல் எவ்வாறு நடக்கிறது என்பது அதில் நடக்கும் கோளாறுகள் போன்ற பல விவகாரங்கள் விவாதிக்கப்படவேண்டியவை. அதிலும் வெளிப்படையான தன்மை தேவை என்பது மறுப்பதற்கில்லை. செல்வாக்கை பயன்படுத்துவது, மாநில வேற்றுமைகள் என பல சிக்கல்கள் உண்டு. ஆனாலும் தேர்தல் வரையறுக்கப்பட்ட ஜனநாயக முறைப்படி நடக்கிறது. இதற்கு சீர்திருத்தங்களுடன் கூடிய மாற்றங்கள் தேவை. ஆனால் பிஜேபி தேர்தல் முறைக்கே ஆப்பு வைக்கிறது. தேர்தல் நடைபெற்றால் கேத்தன் தேசாய் போன்றவர்களெல்லாம் பதவிக்கு வந்துவிடுகிறார்கள்..ஆகவே நியமன முறை தான் சரியானது.. அதிலும் எல்லோருமே மருத்துவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை…என அதன் மாற்று ஆலோசனை பட்டியல் நீளுகிறது. அது மட்டுமல்லாமல் இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பையே கலைத்து விட்டு புதிதாக தேசிய மருத்துவ கமிஷன் எனும் புது பெயரில் துவக்கலாம் எனவும் முன்மொழிகிறது.

அதற்கான மாதிரி சட்ட முன்முடிவுகளையும் யாரெல்லாம் அதில் முடிவு எடுக்கும் அதிகாரத்திற்கு நியமிக்கலாம் என்பது போன்ற பல ஆலோசனைகளை விவாத பொருளாக்கியுள்ளது. ஒரு தனி நபரின் கீழ் கமிஷனை நியமித்து, அவருக்கு கீழ் இயங்கும் குழுவில் சிறு எண்ணிக்கையில் மருத்துவர்கள், பெரும்பான்மையாக மருத்துவம் சாராதவர்கள், தரவரிசை தீர்மானிப்பவர்கள் , அறிஞர்கள், என பல்வேறு நபர்களை உள்ளே போட திட்டமிடுகிறது.

ஏற்கெனவே பல துறைகளில் காவிமயமாக்க பிஜேபி எடுத்து வரும் முயற்சிகள் நாம் அறிவோம்.. மருத்துவ துறையை வேத காலத்தோடு ஒப்பிட்டு, மோடி உட்பட பலர் பேசி வருவதும், அதை விஞ்ஞானமாக பார்க்காமல் அதிலும் குறுகிய அரசியல் லாபம் தேடும் முயற்சிகளை நாம் அனுமதிக்ககூடாது. இருக்கும் நடைமுறையில் உரிய மாற்றங்கள் செய்து, வெளிப்படைதன்மையோடு செயல்படும் அமைப்பாக மாற்றவேண்டும். ஊழல், முறைகேடுகள், தகுதியில்லாதவர்க்கு அதிகாரம், செல்வாக்கு மையங்கள் என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமே தவிர பரவலாக்கமல் குவிமையமாக, மருத்துவ கவுன்சிலை திருத்தியமைப்பது பலனளிக்காது.

கேத்தன் தேசாய் போன்ற தனிநபரின் ஒழுக்கமற்றவர்கள் பற்றிய பிரச்சனை அல்ல இது. இந்த சமூகத்தில் இருக்கும் அழுக்கு, நெறியற்ற விஷயங்கள் என அனைத்தும் அடங்கும்.

கேத்தன் தேசாய் சர்வதேச தலைவராக பொறுப்பேற்றுள்ளது குறித்து பல மருத்துவர்கள் தங்கள் கண்டண குரலை , எதிர்ப்பை பல வடிவங்களில் தெரிவித்துள்ளனர். நமது குரலும் அவர்களோடு இணைந்து ஒலிக்க வேண்டும். நிறுவனமயமாகி வரும் ஊழல், அதற்கு துணை நிற்கும் கார்ப்பரேட்டுகள் என உள்ள அந்த சதிவலை பின்னலை, அதில் குளிர் காய்ந்து அரசியல் செய்ய நினைக்கும் பிஜேபி-யை மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டிய அவசியமும் கட்டாயமும் உள்ளது.  இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே, அகில இந்திய ஹோமியோ மருத்துவ கவுன்சிலின் தலைவர் முறைகேடாக கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் கைது செய்யப்பட்டுள்ளார் எனும் தகவலும், தென்காசிக்கு அருகில் நாட்டு மருந்து சாப்பிட்டு 3 அப்பாவிகள் இறந்ததும் பரப்பரப்பாக விவாதிக்கப்படுகிறது.

 கேத்தன் தேசாய்,வழியில் பயணிக்கும் கூட்டம் ஒரு புறம், தனக்கு வந்திருக்கும் நோய்க்கு எளிய, குறைந்த செலவில் மருத்துவம் தேடும் மக்கள் திரள் ஒரு புறம் என இரு வேறு இந்தியாவாக காட்சியளிக்கும் நம் தேசத்தின் நிலையை மாற்ற வேண்டாமா?

– என்.சிவகுரு.