நிர்பயா தினமும் நில்லாத பயமும் – சுசீந்திரா

harassment

இதோ 3 வருடங்களைக் கடந்தாயிற்று. அந்த இரவில் பேருந்தில் என் இதயம் படபடக்க உயிரையேனும் விட்டு வையுங்கள் என்ற என் கதறல்கள் ஒலித்து. நாடு முழுவதும் பேரிடியாக எழுந்தது அது. அதன் பிறகாவது என் போன்ற பெண்களின் கதறல்கள் சிறிதேனும் அடங்கும் என்று எதிர்பார்த்த எனக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் தான். மேன்மேலும் பல வடிவங்களில் நிகழ்ந்து வரும் பாலியல் வன்முறைகளைப் பார்க்கும் போது பாரதியின் வரிகளான “விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்” என்பவையாவும் கனாக்களாவே ஆகிவிடுமோ என்ற பயம் அதிகரிக்கவே செய்கிறது. இந்திய நாடு முழுவதும் இன்றும் 29 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்பது எத்தனை பெரிய கொடுமை. 2008 முதல் 2013 வரை 21,467 என அறிக்கையில் பதியப்பட்டு இருந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது, அதன் பிறகும் 2013 முதல் 2016 வரை 24,923 என அதிகரித்திருப்பது நம் சமூகம் எதை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்பதை புலப்படுத்தும்.
அவன் ஆண் அதனால் செய்யலாம் எனத் தொடங்கி, அவன் ஆண் அதனால் அனுமதிக்கலாம் என்று பயணித்து, அவன் ஆண் அதனால் இன்று கொல்லலாம் என வடிவெடுத்திருக்கிறது நம் சமூகம். குறிப்பிட்ட சில பறவை இனங்களில் கூட ஆண் பறவை பெண் பறவையின் அனுமதியுடன் தான் புணர முடியும். பெண் பறவையே அதனை தீர்மானிக்கும். ஆனால், நம் மனித இனத்தில் தான் “ பெண்” என்பவள் எவ்வித உரிமையையும் கொண்டவளாக பார்க்கப்படுவதில்லை. இதற்கு துணை நிற்க சாமர்த்தியமாக திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டவை தான் மதம், சாதி, மற்றும் கலாச்சாரம். மதம் கொண்டு வந்த சாதியும், இரண்டும் சேர்ந்து கொண்டு வந்த கலாச்சாரமும் இன்றும் மனிதனை குறிப்பாக பெண்களை வதைக்கும் ஆயுதங்களாக உருமாற்றுபட்டுள்ளன என்பதில் மாற்றுயேதுமில்லை.

இல்லையேல்; ஆடையும், ஆண் நண்பனும், இரவும் போதும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய என்ற துணிச்சலும் உரிமையும் யார் தந்தது? என்ற என் கேள்விக்கு இன்றும் விடையைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறது நம் சமூகம். ஆடை தான் காரணம் என்றால், தகப்பனாலும், தமையனாலும், 2 வயதோ 14 வயதோ அது பெண் உடல் பெண் அங்கம் அதன் மீது வன்முறை தொடுக்க எனக்கு அதிகாரம் உண்டு என்பதை எங்கிருந்து பெற்றீர்கள் கனவாண்களே? முன் முளைகளும், பெண் உறுப்பும் முழுமையாக வளராத அந்த உடலிலும் வன்முறை தொடுக்க எத்தனை வக்கிரம் வாய்த்திருக்க வேண்டும். ஆக, “மனு நீதியில்” கூறப்பட்டிருப்பதைப் போல எல்லா சூழலிலும் பெண்ணாகப்பட்டவள் ஆண் துணையின்றி இயங்குதல் ஆகாது என்பதை இப்படியும் அர்த்தப்படுத்தி அனுபவிக்கலாமோ?!

உலக அளவில் நாள்தோறும் 35 சதமான பெண்கள் அதாவது சராசரியாக 3 க்கு 1 பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனக் கூறுகிறது சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. அதிலும் 30 சதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதையும் நிரூபித்துள்ளது. இவர்களில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களில் 38 சதம் பெண்கள் தங்களுக்கு தெரிந்த நபர்களாலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனவும் கூறுகிறது அவ்வறிக்கை. “உணர்வுள்ள அனைவருக்கும் உயிர்த்தல் பொதுவானதே” என்கிற போது ஒரு பாலினத்தின் மீது மட்டும் இத்தனை வன்முறையென்பது எந்த நியாயத்தை கூற முடியும்?

இந்தியா உலக அளவில் பெண்கள் வாழ்வதற்கான பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் 4 வது இடத்தையும், பாலியல் சமத்துவத்தில் 127 வது இடத்தையும் பெற்றிருப்பதைப் பார்க்கும் போது என் போன்ற பெண்களை இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்ற அச்சம் மேலோங்கவே செய்கிறது.

தேசிய அளவில் 10 வது இடம் பிடித்திருக்கும் தமிழகமோ காதலை ஏற்க மறுத்தனர் என்று 7 மாதங்களில் 12 கொலைகளை பாலின காரணத்திற்காக செய்திருப்பது எனக்கு இருந்த சிறு பலத்தையும் நிலை குலையச் செய்து விட்டது.

நான் யாரைக் காதலிக்க வேண்டும், யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்க திராணியற்ற ஜடமாக இருக்கவே விரும்புகிறீர்களா சகோதரர்களே?! பெண் உடலும் ஆண் உடலைப் போல உணர்ச்சியுள்ள வன்முறை தொடுத்தால் வலிக்கின்ற உடலே. ஆண் மார்பை பார்க்கும் போது அவர் கையும் மார்பும் ஒன்று தான் என்ற பக்குவமும் நாகரிகமும் பெண்களுக்கு சாத்தியமாகி இருக்கும் போது ஆண்களுக்கு மட்டும் கிளர்ச்சியைத் தூண்டுகிறது என்பது அவர்களின் மனக் கட்டுப்பாட்டின் பலவீனத்தை புலப்படுத்தவில்லையா? பார்த்தாலே பரவசம் இயற்கையின் மீது கொள்ள வேண்டும் மாறாக நீங்கள் மார்பில் வைக்காதீர் நண்பரே!

பிறக்கும் போது பெண்/ஆண் உறுப்புகளைத் தவிர வேறொன்றும் வேறுபடவில்லை நமக்குள். வளரும் போதும் வளர்ந்த பின்பும் ஆண் என்பதனால் இந்த உடையை தான் உடுத்த வேண்டும், இப்படித்தான் சிகை, பாவனை, பேச்சு இருக்க வேண்டும் என்ற கற்பிதங்களை சமூகத்திலும் அதன் ஒரு அங்கமான குடும்பத்திலும் ஏற்றியதே பாலின பிரிவினை உருவானதன் மூலக் காரணம். எளிமையாகச் சொன்னால், “கண்ணுக்கு மை அழகு, கார் கூந்தல் பெண் அழகு” என்பதை பெண் எப்படி இருந்தால் அழகு என்பதை கண்மூடித்தனமாக நம்மை ஏற்றுக் கொள்ள வைத்ததும் அத்தகைய கற்பிதம் தான். அடிப்படையில் நாம் ‘மனிதர்’ பிறப்புறுப்புகளால் மட்டுமே நாம் ஆண் பால் (அயடந ளநஒ) பெண் பால் (கநஅயடந ளநஒ). ஆனால் பாலினம் (பநனேநச) என்பதற்கான கற்பிதங்கள் யாவும் இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே.

பயிற்சி இருந்தால் ஆண், பெண் பேதமில்லாமல் எல்லார்க்கும் எல்லாமும் சாத்தியமே என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கிய நம் சகோதரி ‘மேரிகோம்’ கூட பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதை தனது மகன்களுக்கு எழுதிய கடிதத்தில் பகிர்ந்திருப்பதை பார்க்கும் போது இரக்கமில்லாமல் இறுகிப்போனதோ நம் சமூகம் என கேட்கத் தோன்றுகிறது.

ஓட ஓட விரட்டி பிடித்து பாலியல் வன்புணர்வு செய்யும் ஆணின் “ ஒழுக்கம்” என்பது ஆண் என்ற ஆதிக்கத்திலும், பெண்கள் ஒழுக்கம் என்பது பெண் உடலின் மீதும், அவள் தாங்கி நிற்கும் உடையின் மீதும், இயங்கும் நேரத்தின் மீதும் இருப்பது நம் அறியாமை அல்ல அத்துமீறத் துடிக்கும் அறமின்மை என்பதை மறந்துவிடலாகாது. காமத்திலும் காதலுண்டு அதை அறியாதோர் மனதில் கலக்கம் உண்டு என்பதை அறிவியல் கொண்டு அலசுங்கள் அன்பானவரே!
அன்று இரவு நான் சரிந்தது போதும். இரவு அல்ல இழிவுக்கு காரணம் நள்ளிரவில் ஒரு பெண் இந்திய திருநாட்டின் வீதிகளில் எவ்வித இடையூறும், வன்முறையும் இல்லாமல் பாதுகாப்போடு என்று இயங்க முடிகிறதோ அன்றே நம் நாட்டிற்கு முழு விடுதலை கிடைத்ததாக கூறினார் தேசப்பிதா காந்தி. இன்றும் அப்படி ஒரு இரவை நோக்கியே நாம் பயணிக்க வேண்டி உள்ளது, இரவு இயற்கையின் இயல்பு. அது இவர்க்கு தான் சொந்தம் என்ற உரிமை எவரால் வேண்டுமானாலும் எழுப்பப்பட்டிருக்கலாம். அதனை தகர்த்து ‘வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற பாரதியின் குரலெழுப்பி ஃபீனிக்ஸ் பறவையாய் சிறகை விரித்து மீண்டு எழுவோம் இரவைக் கைப்பற்றுவோம்! இதோ கரங்கள் விரித்து காதலோடு நான் காத்திருக்கிறேன்; காலங்களைக் கைது செய்து கரவொலி எழுப்பி கூச்சலிடுவோம் “இனியும் வேண்டாம் வன்முறை என்று”!

About இளைஞர் மு‍ழக்கம்