சிங்கப்பூரின் “முன்மாதிரி“ தொழிற்சங்க இயக்கம்-1

எங்கு முன்மாதிரிகளைப் பற்றிய வகுப்பு நடந்தாலும் அதில் சிங்கப்பூர் இடம் பெற்றிருக்கும். அது அரசியலமைப்பு, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சி போன்றவைகளுக்கு எப்பொழுதுமே சிங்கப்பூர்தான் உதாரணமாக காட்டப்படும். இந்தப் பின்னணியில் தொழிற்சங்க இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சிங்கப்பூர் தொழிற்சங்க இயக்கம்தான் காட்டப்படுகிறது. குறிப்பாக ஒரு முன்மாதிரி தொழிற்சங்க இயக்கம் என்பது சிங்கப்பூரின் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் போன்று இருக்க வேண்டும் என்பதே தொழிற்சங்க இயக்கத் தலைவர்களுக்கு ஆளும் வர்க்கங்களின் முன்முயற்சியால் நடத்தப்படும் வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கும் பாடம். இந்த ‘ஒழுங்கு‘, ‘கட்டுப்பாடு‘ ‘பொறுப்புணர்ச்சி‘, ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இவற்றின் பின்னால் மறைந்திருக்கும் அரசியலை புரிந்து கொள்வது அவசியமாகும்.

சிங்கப்பூர் மலேசிய கூட்டாட்சியிலிருந்து பிரிநது தனிக்குடித்தனம் போனது 1965ல். மலேசியா கூட்டாட்சி பிரிட்டிஷ் ஆட்சியின் பிடிலிருந்து விலகி 1957ம் ஆண்டுமுதல் சுதந்திரமாக செயல்படத் துவங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால கட்டமானது உலக அரசியலில் காலனியாதிக்கத்தின் ஒழிப்பிலும, பனிப்போரின் தள்ளுமுள்ளுகளாலும் தீர்மானிக்கப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் அடைந்த வெற்றியானது உலக அரங்கில் சோசலிச அமைப்பிற்கு ஒரு மரியாதையையும் அதனைத் தொடர்ந்து சீனாவில் மக்கள் சீனக் குடியரசு 1948ல் அமைக்கப்பெற்றதும். வியட்நாம் இந்தோனேஷியா மலேசியா போன்ற கிழக்காசிய நாடுகளில் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் சில இடங்களில் கம்யூனிஸ்ட்கள் காலனி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தியதும் வரலாறு.

மலேஷியாவில் அப்படிப்பட்டதொரு ஆயுதங் தாங்கிய எழுச்சியானது கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடைபெற்று வந்தது. பிரிட்டிஷ் ராணுவம் தலையிட்டு கம்யூனிஸ்ட்களை அழித்தொழித்து உள்ளுர் மிதவாதிகள் கையில் ஆட்சியைக் கொடுக்க முன்வந்தது. இதையொட்டி மலேசியாவை கூட்டாட்சி அமைப்பாகவும் கூட்டாட்சியில் நீடிப்பவை தனிநாடாகச் செல்வதற்குமான உரிமையும் உள்ள அரசாங்கம் ஏற்பட்டது. இந்த பிராந்தியத்தில் கம்யூனிஸ்ட்களின் தொல்லையை சமாளிக்க ஒரு முன்மாதிரி நாடு உலக கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களுக்கு தேவைப்பட்டது. இந்தத் தேவையின் செயல்வடிவமாக, அவர்களின் கூட்டு முயற்சியால் உருவானதுதான் இந்த முன்மாதிரி நாடும். அதில் உருக் கொண்டுள்ள முன்மாதிரிகளும். இந்த முன்மாதிரிக்கு நிதியளித்து மிளிரச் செய்வதன் மூலம்தான் பிராந்தியத்தின் கம்யூனிஸ செல்வாக்கை மங்கச் செய்ய முடியும் என்பதே பனிப்போரில் நடைபெற்ற பிரிதொரு முக்கியமானதொரு அரசியல் நிகழ்ச்சிப் போக்காகும்.

சிங்கப்பூர் நாட்டில் அவர்களுக்கென்று எந்தவொரு இயற்கை வளமும் கிடையாது. ஆகவே அதன் பொருளாதாரமானது அடிப்படையாக (predominant) வணிகப் பொருளாதாரமாகவே இருந்து வருகிறது. அவர்களின் GDPயில் கிட்டத்தட்ட 65% வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயாகும். 23 சதமே உற்பத்தி மற்றும் கட்டுமானத்தின் முலம் ஈட்டப்படும் வருவாயாகும். வணிகத்திலும் வங்கிச் சேவைகள் மற்றும் தொழில் சேவைகள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. வங்கிச் சேவையில் ஸ்விஸ் வங்கிகளைப் போன்று தில்லுமுல்லுக் கணக்குகள் உண்டு என்னும் பர்மாவின் சர்வாதிகாரிகள் தங்கள் பணத்தை மறைத்து வைத்திருக்கும் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்தான் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளது. அதன் பொருளாதாரமானது 1965ம் ஆண்டில் சரஸ்வதி சபதம் படத்தில் வரும் – ஊமைச் சிவாஜியை போன்று பின்தங்கிய நிலையில் இருந்து, சிவாஜி பெரும் அறிவாளியாக மாறுவது போல் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கடாக்ஷத்தால் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டது. இந்தப் பிண்னணியில்தான் அந்த நாட்டில் உள்ள ஒரே தொழிற்சங்க மையமான ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸைப் பற்றிய மதிப்பீடு செய்ய வேண்டும்.

நமது நாட்டில் கூட அரசாங்கத்தாலோ நிறுவனங்களாலோ Sponsor செய்யப்படும் தொழிற்சங்க வகுப்புகளில் முக்கியமாக முன்வைக்கும் பிரச்சனை Multiplicity of Trade Unions. ஒரே தொழிற்சங்கம்தான் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நன்மை பயப்பதாகும் என்பதே அவர்களின் மையக்கருத்து. இதில் ஓரளவு உண்மை உண்டு என்றாலும். கொள்கை வேறுபாடுகளால் தொழிற்சங்கம் பிளவுபடுவது தவிர்க்க முடியாதது. 1919ல் துவங்கிய அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸானது 1947ல் சுதந்திரம் அறிவிக்கப்படும் சில நாட்களுக்கு முன்புதான் சர்தார் வல்லபாய் பட்டேலாலும், ஆச்சார்யா கிருபளானியாலும் பிளவுபடுத்தப்பட்டு இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. AITUC-யில் கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம் பெருகியதாலேயே INTUC-ஐ உருவாக்குவதாக கூறினார்கள். சிங்கப்பூரிலும் இது போன்ற நிகழ்வுகள் விதிவிலக்கல்ல.

National Trades Union Congress Logo

சிங்கப்பூரில் செயல்பட்டுவந்த சிங்கப்பூர் தொழிற்சங்க காங்கிரஸானது (Singapore Trade Union Congress – STUC) பிளவுபட்டு தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (National Trade Union Congress – NTUC) என்றும் சிங்கப்பூர் தொழிற்சங்க கூட்டமைப்பு (Singapore Association of Trade Unions- SATP) என்றும் இரண்டாக உடைந்தது. STUC யானது இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றம் சாட்டியே People’s Action Party என்ற கட்சியின் முன்முயற்சியால் அந்தப் பிளவு ஏற்பட்டது.

தற்பொழுது People’s Action Party ஆளும் கட்சியாகும். எஞ்சியது SATU யாக பெயர் மாற்றம் பெற்றது. எனவே SATU வானது இடதுசாரிகளின் தலைமையால் நடத்தப்பட்டு வந்த தொழிற்சங்கமாகும். இதையொட்டி பிப்ரவரி 1963ல் சிங்கப்பூர் அரசானது ஆப்பரேசன் கோல்டுஸ்டோர் (Operation Coldstore) என்ற நடவடிக்கை மூலமாக இடதுசாரிகளை கைது செய்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி அவர்கள் நடத்திவந்த சிங்கப்பூர் தொழிற்சங்க கூட்டமைப்பைக் கலைத்து. இப்படியாக அந்நாட்டில் “ஒரே தொழிற்சங்கத்தை“ உருவாக்கி ‘தொழிற்சங்க ஒற்றுமையை‘ ஏற்படுத்தினார்கள். 1963ல் சிங்கப்பூர் டொமினியன் அந்தஸ்து உள்ள பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட நாடாக்க இருந்த்து. செப்டம்பரில் அது மலேசிய கூட்டாட்சியுடன் இணைந்தது. 1965ல் தனிநாடாகியது.

பொதுவாக ஒரு தொழிற்சங்கத்தின் இருப்பின் அடிப்படையே கூட்டுபேர உரிமையும், முதலாளியின் தாக்குதலிலிருந்து (Collective Bargaining and Defend them against onslaught of the owner) தங்களை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும். இந்த உரிமைகளை நிலைநாட்ட முடியாதவை ஒரு மனமகிழ் மன்றமாகவோ ஒரு தன்னார்வ சேவை அமைப்பாகவோதான் இருக்க முடியும். நான் தொழிற்சங்கத்தில் இந்த இரண்டு உரிமைகளுக்காக பதினைந்து ஆண்டுகாலம் பணியாற்றியதன் அனுபவமானது கூட்டு பேரத்திற்காக தொழிலாளர்களை தயார்படுத்தும் பொழுதெல்லாம் Over Educate செய்கிறாய் என்று எனக்கு நிர்வாகத்தின் தரப்பிலும் முன்னாள் தலைவர்களாலும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதே போல் தொழிலாளர்களுக்கான என்னுடைய Defensive Role என்பது Offensive Role ஆக வியாக்கியானப்படுத்தப்பட்டும் இருக்கிறது என்பதை நினைவு கூற விரும்புகிறேன். இந்த இரண்டு முனைகளிலும் NTUC எவ்வாறு பணியாற்றி வருகிறது என்பதே நம்முன் உள்ள கேள்வி.

தொடரும்…