சாதி , மத மோதலுக்கு முடிவுகட்டுவோம்

 – இரா.வேல்முருகன்

                இந்திய ஐனநாயக வாலிபர் சங்கம் பிறக்கின்ற போதே சரியான இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது. இன்றைக்கும் இந்தியாவில் பல அரசியல் கட்சிகளுக்கு கொள்கையோ கோட்பாடோ கிடையாது. அதிகாரமும், பணமும் கிடைக்கும் என்றால் யார் யாருடனும் கூட்டணிக்கு செல்வார்கள். எத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளையும் கடைப்பிடிப்பார்கள். எந்த அரசியல் நெறிமுறையும், கடைப்பிடிக்க மாட்டார்கள்.

இது ஒரு புறம், இன்னொரு புறம் அகண்ட பாரதம், இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும். என்ற ஆர்.எஸ்.எஸ் சின் கொள்கையை அமல்படுத்த வேண்டும். ஆனால் வெளியில் வேறுமாதிரி நாடகம் ஆடி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது பகிரங்கமாகவே இந்துக்கள் அல்லாதவர்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் வாழ முடியாத சூழலை உருவாக்குகிறார்கள்.

1989 ல் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வி.பி.சிங் முயற்சி செய்தபோது நாடு முழுவதும் கலவரம் செய்து, உயிரோடு கொளுத்திவிட்டு தீக்குளித்தார் என்று தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இடஒதுக்கீட்டிற்கு சவக்குழி வெட்டினார்கள்.

1991 ல் ராமனுக்கு கோயில் கட்டுகிறோம் என்ற பெயரில் அத்வானி நடத்திய ரத யாத்திரையின் முடிவில் 450 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர், பெண்கள் வன்புணர்வுக்காளாயினர் பல ஆயிர கணக்கான குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டனர் தடுக்கவேண்டிய ஆட்சியாளர்கள் துணை நின்றனர்.

இத்தகைய மத வெறிக்கும், சாதி வெறிக்கும் எதிராக நாடு முழுவதும் களத்தில் இறங்கி போராடியது வாலிபர் சங்கம் அதே களத்தில் தென்மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் சாதிய கலவரம் மூண்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் தீக்கிறையாக்கப்பட்து. எங்கு பார்த்தாலும் கொலையும், கலவரமுமாய் காட்சி தந்தது. அந்த நேரத்தில் வாலிபர் சங்கத் தோழர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி அமைதிக்கான இயக்கத்தில் ஈடுபட்டது. 1300 இளைஞர்களைத் திரட்டி வெண் சீருடையோடு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் துவங்கி நெல்லை வரை வேண்டாம் வேண்டாம் சாதிய மோதல். வேண்டும் வேண்டும் வேலையும், கல்வியும். அண்ணன் தம்பிகளாக வாழ்ந்த பூமியில் குரோதம் வேண்டாம். வேண்டும் வேண்டும் தொழில் வளர்ச்சி, வேண்டும் வேண்டும் வேலைவாய்ப்பு என்ற கோஷங்களை போட்டுக்கொண்டு வாலிபர் சங்கம் மிடுக்காய் நடந்தது.

இந்த நடை பயணத்தின்போது பங்கெடுப்பதற்கு வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள் ஏன் என்றால் கலவரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த நேரம் எனவே இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க சென்னைக்கு வேலைக்கான இன்டர்வியுக்கு செல்கிறோம் என்று வீட்டில் பொய் சொல்லி பங்கெடுத்தார்கள் காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் வாலிபர் சங்கம் அனைத்தையும் தகர்த்து கம்பீரமாய் நடைப்பயணத்தை முடித்தது மட்டும்மல்ல கலவரம் நடந்த இரண்டு பகுதியிலும் சென்று வேண்டாம் சாதிய மோதல் என்று கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்த அமைப்பு.

அந்த கலவரத்திற்கு காரணம் என்னவென்று ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதியரசர் மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து,பல்வேறு அமைப்புகளை சந்தித்து ஆய்வு நடத்தி தென் மாவட்டக் கலவரத்திற்கு காரணம் இந்த பகுதியில் தொழில் இல்லாமை, வேலைவாய்ப்பற்ற சூழல் தான் காரணம். எனவே தென்மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பையும் உருவாக்குங்கள் என அரசுக்கு பரிந்துரையை கொடுத்தது. நீதியரசர் மோகன் பரிந்துரையை அமல்படுத்து, தென் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில் வளர்ச்சி ஏற்படவும் ஆதாரமாக விளங்கக்கூடிய சேது கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தி சாதிய கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இருந்து இராமேஸ்வரம், விருதுநகரில் இருந்து இராமேஸ்வரம், சிவகங்கையில் இருந்து இராமேஸ்வரம், தூத்துக்குடியில் இருந்து இராமேஸ்வரம் என வாலிபர் சங்கத் தோழர்கள் சைக்கிள் பயணமாக ஒரு வான்கலம் நடத்தியது. இந்த இயக்கம் தென் மாவட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மீதும் இந்த கோரிக்கையின் மீதும் பெரிய மரியாதை உருவானது.

இதே போன்று வட மாவட்டங்களில் சாதிய மோதல் ஏற்பட்ட போது பல நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டது, ஆதிக்க சக்திகள் குறிப்பாக வன்னியர் சங்கத்தை சார்ந்த சாதி வெறி பிடித்த கும்பல் தலித் கிராமங்களை சூறையாடியது.கொலை என்பது சாதாரண நிகழ்வாக மாற்றப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட போது வாலிபர் சங்கம் கடலூர் மாவட்டத்தில் சைக்கிள் பயணம் நடத்தி இயல்பு வாழ்க்கையை பாதுகாக்க இயக்கம் கண்டது. வேண்டாம் சாதிய மோதல் வேண்டும் வேலைவாய்ப்பு. என்ற தாரக மந்திரத்தோடு வாலிபர் சங்கம் இயக்கம் நடத்தியது.

ஆதிக்க சாதியினரை எதிர்த்து இயக்கம் கண்டால் என்ன ஆகும் என்பதை காலந்தோறும் வரலாறு நமக்கு கற்பித்துக்கொண்டே இருக்கிறது. அதற்காக கூனி குறுகி அடிமையாக வாழ்வதை விட ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் நிமிர்ந்து நின்று நெஞ்சை உயர்த்தி கம்பீரமாக வாழ்வது வாழ்க்கை என வாழக்கூடியவர்கள் வாலிபர் சங்கத் தோழர்கள் .தற்போது நாம் பார்த்து வருகிறோம் உயர்சாதிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ததற்காக இளவரசன் இரயில் தண்டவாளத்தில் பிணமாக்கப்பட்டான், கோகுல்ராஜ் உயர் சாதிப் பெண்ணை காதலித்ததற்காக யுவராஜ் என்ற சாதி வெறிபிடித்த அரக்கனால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். யுவராஜ் என்ற அரக்கனால் கொலை செய்த விதம் அனைத்தும் காவல்துறை அதிகாரி முதல், முதல் அமைச்சர் வரை அனைவருக்கும் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசும், அரசு அதிகாரிகளும் எவ்வளவு அப்பட்டமான சாதி வெறிப்பிடித்வர்களாக இருக்கிறார்கள். டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா வின் மர்மமான தற்கொலை ஆதிக்கசாதியின் மிரட்டலும், உயர் அதிகாரியின் நெருக்கடியும் ஒரு நேர்மையான அதிகாரியால் நேர்மையாக பணியாற்ற முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் இந்த தற்கொலை பல கேள்விகளையும் நம்மிடையே எழுப்பிச் சென்றுள்ளது.

உயர் அதிகாரிகளுக்கே இதுதான் கதியென்றால் சாதாரண தலித் மக்களின் நிலமையை சொல்ல வேண்டுமா? அப்படிதான் அன்றைக்கு சேலம் நகராட்சியாக இருந்தது அப்போது அங்கு நரசிம்மன் ரோடு வாலிபர் சங்கக் கிளை ஒன்று செயல்பட்டது. அது வளர்ந்து இரண்டாவது கிளையாக இராவணேஸ்வரா கிளை என்று இரண்டாவது கிளை உதயமானது. இவர்களின் தொடர்ச்சியான வேலை போராட்டத்தின் வெற்றி காரணமாகவும் பல கிளைகள் உதயமானது. குறிப்பாக ரவுடிகளின் கூடாரமாகவும், சமூகவிரோதிகளின் புகலிடமாகவும் இருந்த பகுதி கோரிக்காடு. அந்தப்பகுதியில் வாலிபர் சங்கம் உதயமானது அவர்களின் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மின்சாரம் கூட இல்லாமல் இருந்தது.பிறகு வாலிபர் சங்க போராட்டத்தின் விளைவாக மின்சாரம்,குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டது இதன் விளைவாக வாலிபர் சங்கம் அந்தப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக மாறியது. இந்தப்பகுதியில் இருந்த சட்டமன்ற உறுப்பினரின் உதவியோடு 5 விபச்சார விடுதிகள், 8 கள்ளச்சாராய கடைகள்,4 சூதாட்ட விடுதிகள் கோலாகலமாக செயல்பட்டு வந்தது. வாலிபர்சங்கம் இதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் இந்த கடைகளெல்லாம் மூடப்பட்டன, சட்டமன்ற உறுப்பினர் வேறு பகுதிக்கு வீட்டை மாற்றிசென்றார்.

வாலிபர் சங்கத்தின் செயல்பாட்டால் முடங்கிப்போன அவர்களின் வியாபாரம் அதன் உச்சகட்ட கோபமாய், வாலிபர் சங்கத் தோழர்கள் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளானர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவு எடுத்து மூலப்பிள்ளையார் கோயில் பகுதியில் சீனிவாசனும் மற்ற தோழர்களும் இணைந்து 150 க்கும் மேற்பட்ட தொழில் முறை ரவுடிகளை அடித்து விரட்டினர். கோபத்தின் உச்சத்தில் இருந்த சமூக விரோதிகள் சீனிவாசனை கொல்வதற்கு 4 ஆட்டோக்களில் ரவுடிகள் வலம் வந்தனர். அப்போது கட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த சீனிவாசனை அவர்கள் தோழர் என அழைத்தனர் யாரோ நமது தோழர்கள் கூப்பிடுகிறார்கள் என ஆட்டோவின் அருகாமையில் சென்றார்.அவரை ஆட்டோவில் தூக்கிச் சென்றனர்.

தோழர்கள் நிறைந்த பகுதியான நரசிம்மன் ரோடு பகுதிக்கு சென்றனர் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து இரவு முழுவதும் அடித்தனர். கத்தியால் வெட்டியும் தண்ணீர் ஊற்றி ஊற்றி மயக்கம் தெளிய வைத்து கொடுமைப்படுத்தினர். கை கால்களை வெட்டினர்,தலையில் ஒரு பகுதியில் கத்தியை விட்டு மறு பக்கத்தில் எடுத்தனர்.இப்படி அரக்கத்தனமாய் கொலை செய்த சமூக விரோத ஆதிக்கசாதியினர் கொலை செய்து 6 கி. மீ க்கு அப்பால் உள்ள செலத்தாம்பட்டி ஏரியில் எறிந்தார்கள்.

அரசியல்வாதிகள் தேர்தலில் ஓட்டு கேட்கும் போது கூட குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதை போல் நாடகம் ஆடி தன் கையிலே முத்தம் இட்டுக்கொல்லும் காட்சியை எல்லாம் பார்த்துள்ளோம்.சாதிகள் இல்லையடி பாப்பா என்று வாய் மணக்க பேசிவிட்டு தலித் மக்களை கொல்வதற்கு துனை போகக்கூடிய அரசியலுக்கு நடுவே தான் வாலிபர் சங்கம் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தது. திருப்பூர் மாவட்டம் இடுவாயை சேர்ந்த தோழர்கள் தலித் மக்களுக்கு குடிநீர் கேட்டும் குடியிருக்க இடம் கேட்டும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினார்கள். அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரத்தினசாமி பஞ்சாயத்து தலைவராக தேர்தலில் போட்டி போட கிளை தீர்மானித்தது.அந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். அடுத்த தேர்தலில் ரத்தினசாமி பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்றார்.

அவர் வெற்றிபெற்றவுடன் ஆதிக்க சாதியினர் கட்டுப்பாட்டில் இருந்த 1200 ஏக்கர் புறம்போக்கு நிலங்களை எடுத்து தலித் மக்களுக்கு பட்டா போட்டு கொடுத்தனர். அவர்கள குடியிருக்கக்கூடிய பகுதிகளுக்கு அனைத்து தெருவிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கான தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்பட்டது. பஞ்சாய்த்து அலுவலகத்தின் உள்ளே சக்கிலியர் சம்மாக அமர்வதா என்ற கோபம். அடுத்த தேர்தலில் இரத்தினசாமியை தோற்கடிக்க அனைத்து ஆதிக்கசாதியினரும் சேர்ந்து அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து எதிர்த்தனர். ஆனால் இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட இரண்டு மடங்காக 1532 வாக்குகளை பெற்றார். இதை எல்லாம் ஜீரணிக்க முடியாமல் ஆதிக்க சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்து இரத்தினசாமியை கொலை செய்வதற்கு திட்டமிட்டனர்.2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் நாள் நள்ளிரவில் கொடுமையான முறையில் உடல் முழுவதும் வெட்டி மரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர். அவரின் உடலில் ஒரு அட்டையில் அவரின் இரத்தத்தால் கீழ்கண்ட வாசகங்களை எழுதிவைத்தனர்.

1.நீ கம்யூனிஸ்டாக இருந்தது 2.சக்கிலியர்களுக்கு ஆதரவாக இருந்தது 3.சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந்தது 4.ஆக்கிரமிப்புகளை அகற்றியது 5.மீண்டும் தேர்தலில் போட்டியிட்டது 6.போட்டியில் வெற்றிபெற்றது 7.போனமுறை சாவிலிருந்து தப்பியது 8. ஆதிக்கத்தை எதிர்த்தது. இந்த குற்றத்திற்காக தான் உன்னை கொலை செய்கிறோம் என எழுதிவைத்தனர்.

அரசும், அரசு அதிகாரிகளும் சாதி,மத பிற்போக்குத் தனமாகவும் அடிப்படை வாதிகளாகவும் இருக்கின்ற போது. சாதாரண மக்களின் உரிமைகள் சாதாரணமாக கிடைக்காது. எனவே தான் வாலிபர் சங்க ஊழியர்களை நாம் இத்தகைய அடக்குமுறைகளுக்காக பலிகொடுத்தோம். எந்த லட்சியமாக இருந்தாலும் அதை அடைவதற்கு அர்ப்பணிப்பும் தியாகமும் இல்லாமல் சாத்தியமில்லை என்பதை உணர்ந்த ஊழியர்கள் இருப்பதால் தான் லட்சியத்திற்காக தங்கள் உயிரை துச்சமாகக் கருதி சமூக மாற்றத்திற்காக அர்ப்பணித்துள்ளனர். இத்தகை வீரம் செறிந்த அமைப்பை அடக்கு முறையாலோ அதிகாரத்தாலோ அழித்துவிட முடியாது. நீங்கள் வேண்டுமானால் எங்களை கொலை செய்யலாம் ஆனால் உங்களால் எங்களின் கொள்கையை ஒரு போதும் அழிக்கமுடியாது.

எத்தகைய அடக்குமுறைகளையும் அதிகாரங்களையும் பார்த்து பயந்து விலகி நிற்காமல். ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் அரணாக வாலிபர்சங்கம் திகழும்.வாலிபர் சங்கத்தின் கடைசி உறுப்பினரின் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை சாதி ,மத பேதமின்றி சமத்துவ இந்தியாவை உருவாக்கிட வாலிபர் சங்கம் கம்பீரமாய் களத்தில் நிற்கும்.

About இளைஞர் மு‍ழக்கம்