இரா. நடராசனுக்கு பால சாகித்ய அகடமி விருது

2014 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்ய அகடமி விருது ஆயிஷா இரா.நடராசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் தொகுப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழில் சிறுகதை, நாவல், அறிவியல் நூல்கள் என அனைத்துத் தளங்களிலும் இயங்கிவரும் முன்னணி எழுத்தாளர், கல்வியாளர் நடராசன்.  சிறுவர் இலக்கிய படைப்பாளியாக கடந்த இருபதாண்டு களாக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இவரது ஆயிஷா எனும் குறுநாவல்  தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.

நாகா, மலர் அல்ஜிப்ரா, ரோஸ், ஒரு தோழனும் மூன்று நண்பர்களும், ஒரு தோழியின் கதை, ரஃப் நோட்டு போன்றவை சிறுவர்களுக்கான இவரது நாவல் படைப்புகள். சர்க்கஸ் டாட்காம், பூஜ்ஜியமாம் ஆண்டு, விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள், பூமா, விண்வெளிக்கு ஒரு புறவழிச்சாலை ஆகியவை இவரது அறிவியல் புனை கதைகள். பார்வையற்ற குழந்தைகளும் வாசிக்கும் வண்ணம் தமிழின் முதல் முயற்சியாக இவரது `பூஜ்ஜியமாம் ஆண்டு’ நாவல் பிரெயில் மொழியிலும் வெளிவந்துள்ளது. நீங்களும் விஞ்ஞானி ஆக விரும்புகிறீர்களா உட்பட சிறுவர்களுக்கான முப்பத்தாறு அறிவியல் நூல்களை இதுவரை படைத்திருக்கிறார். இவரது பல சிறுவர் இலக்கிய படைப்புகள் மலையாளம், தெலுங்கு, கொங்கனி, ஆங் கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் சமீபத்தில் எழுதிய இதுயாருடைய வகுப்பறை எனும் புத்தகம் தமிழகத்தின் புத்தகக் கண்காட்சிகளில் தொடர்ந்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. ஏற்கனவே தனது கணிதத்தின் கதை நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றவர். கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக `புத்தகம் பேசுது’மாத இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார்.

இரா. நடராசனுக்கு புதிய ஆசிரியனின் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்!

About புதிய ஆசிரியன்

  • என் தங்கைக்கு புத்தக உலகத்தை அறிமுக படுத்த ,
    அவளுக்கு அந்த ஆர்வத்தை வளர்க்க , என்ன புத்தகம் முதலில் வாங்கிதந்தால் சரியாக இருக்கும் என்று யோசித்து , பிறகு ” ROUGH NOTE ” புத்தகத்தை வாங்கி கொடுத்தேன் . .
    நான் நினைத்தது நடந்தது . ” பல்பு ” கதாபாத்திரம் அவளை சிரிக்க வைத்து கொண்டே இருந்தது . . பிறகு ” ஆயிஷா ” வை தானாக படித்தாள் . .
    நான் எதற்க்காக இதை இங்கு கூறுகிறேன் என்ற நோக்கம் உங்களுக்கு புறிந்திருக்க கூடும் . .